இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான கும்கி படம், நடிகர் விக்ரம் பிரபுவின் அறிமுகமாக இருந்து பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக வெற்றி பெற்றதோடு, இமான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தன.
மலை கிராமம் ஒன்றை மதம் பிடித்த யானையிடமிருந்து காப்பாற்ற ஹீரோ தனது யானையுடன் செல்லும் பயணம், அங்கு மலர்ந்த காதல் என நகர்ந்த கும்கி கதை, பார்வையாளர்களை கவர்ந்தது. அந்த படத்துக்கு பிறகு இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு கும்கி 2 உருவாகியுள்ளது.
இந்த தொடரையும் இயக்குனர் பிரபு சாலமன் தான் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை சுகுமாரே மேற்கொண்டுள்ளார். பென் ஸ்டுடியோஸ் சார்பில் தவால் கடா இப்படத்தை தயாரித்துள்ளார். இசையமைப்பை நிவாஸ் கே. பிரசன்னா செய்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று மோஷன் போஸ்டர் வெளியாகி, இன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் பெரிய யானை மையமாக இருந்த நிலையில், இம்முறை சின்ன யானையை (baby elephant) மையமாகக் கொண்டு கதை நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஹீரோவும், மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களும் யார் என்பதற்கான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.