கோச்சி : ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் சிக்கிய நடிகை லட்சுமி மேனனுக்கு, செப்டம்பர் 17ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட லட்சுமி மேனன், தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், வேதாளம், ரெக்கா, கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி கோச்சியில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறில், லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த மோதலில், ஐடி ஊழியர் ஒருவரை லட்சுமி மேனனின் நண்பர்கள் காரில் ஏற்றி கடத்திச் சென்று தாக்கியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
இந்த புகாரின் பேரில், லட்சுமி மேனனின் நண்பர்கள் மிதுன், அனிஷ், சோனா ஆகிய மூவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், நடிகை லட்சுமி மேனனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு, அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, முன்ஜாமீன் கோரி லட்சுமி மேனன் தரப்பு கேரள உயர்நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகையை செப்டம்பர் 17ஆம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
