கரூர் கூட்ட நெரிசல் விசாரணை : புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ கேள்விகள்

கரூர்: தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியாகிய சம்பவம் மீதான சிபிஐ விசாரணை அதிகரித்து வருகிறது. விசாரணை நடவடிக்கையின் பகுதியாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாக குழு உறுப்பினரான ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இன்று சிபிஐ முன் ஆஜரானார்கள்.

செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது ஏற்பட்ட பயங்கர நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. ஆனால் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் தவெக தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, வழக்கை சிபிஐக்குக் மாற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி தலைமையில் விசாரணையை கண்காணிக்கும் குழுவும் அமைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ விபத்துக்கான காரணங்களை பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியின் வணிகர்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றோர் உள்ளிட்ட பலரிடமும் நேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நடந்துசென்ற சாலையின் அகலம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை நவீன கருவிகளின் உதவியுடன் ஆய்வு செய்துள்ளது. விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் சிபிஐ கைப்பற்றி பரிசோதித்து வருகிறது.

இந்த நிலையில், கூட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த புஸ்சி ஆனந்தையும், நிகழ்ச்சியின் போது விஜய்யின் பிரசார வாகனத்தில் இருந்த ஆதவ் அர்ஜுனாவையும் இன்று சிபிஐ அழைத்து விசாரணை நடத்தியது. இருவரும் கரூர் சிபிஐ முகாமில் ஆஜராகி விசாரணைக்கு பதில் அளித்தனர்.

Exit mobile version