கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தவெக உயர்மட்ட நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சிபிஐ விசாரணை இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. நேற்று 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய சிபிஐ, இன்று காலை மீண்டும் இருவரையும் விசாரணைக்காக ஆஜராகச் செய்துள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் ஏற்கனவே தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது. நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேகமெடுத்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழு கரூரில் முகாமிட்டு, சம்பவம் நடைபெற்ற பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தது. சாலை அகலம், நீளம் உள்ளிட்ட விவரங்கள் நவீன கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டன. மேலும், கரூர் காவல் துறையினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் உள்ளிட்ட பலரிடமும் சிபிஐ தொடர்ந்து விளக்கங்கள் பெற்றுள்ளது.
இதே நேரத்தில், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதன்பேரில், புஸ்சி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று நடந்த விசாரணையில், விஜய் எந்த நேரத்தில் பிரசாரம் தொடங்கினார், கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்றனர், எவ்வளவு கூட்டம் எதிர்பார்க்கப்பட்டது போன்ற பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், போலீஸாரின் அறிவுறுத்தலையும் மீறி விஜய்யின் பேருந்து கூட்டத்திற்குள் வர காரணம் என்ன, அதிக கூட்ட நெரிசல் இருந்தபோதும் தாமதமாக விஜய் வந்ததற்கான காரணம், ஆம்புலன்ஸ் வந்த நிலையிலும் உண்மை நிலை விஜய்க்கு தெரிவிக்கப்படாததா உள்ளிட்ட முக்கிய கேள்விகளும் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்தின் போது விஜய்யின் வாகனத்தில் ஆதவ் அர்ஜுனா பயணம் செய்ததால், அவரிடம் நடக்கும் விசாரணை மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இன்றும் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சிபிஐ பல்வேறு கோணங்களில் கேள்விகள் கேட்டுவருகிறது. விசாரணை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
