சென்னை: தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எதிர்பார்த்தபடி அமைச்சர் பதவி வழங்கப்படாததால், தி.மு.க.வினர் மத்தியில் கடும் ஏமாற்றமும், அதிருப்தியும் நிலவுகிறது.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஒரு முறைாவது நேரடி அமைச்சர் பதவி கிடைக்கும் என கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர். குறிப்பாக, சங்கராபுரம் தொகுதியைச் சேர்ந்த 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயசூரியன் அவர்களுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடியின் பதவியை வழங்கும் வாய்ப்பு வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
சமூக ஊடகங்களிலும் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் இந்த பதவிக்காக பரிசீலனையில் உள்ளதாக செய்திகள் பரவியிருந்த நிலையில், மூத்தத் துவத்தின் அடிப்படையில் உதயசூரியனுக்கு வாய்ப்பு உறுதி என தி.மு.க. வட்டாரங்களில் நம்பிக்கை ஏற்பட்டது.
ஆனால், முடிவில், பதவியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களின் பொறுப்புகள், ஏற்கனவே அமைச்சராக உள்ளவர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இதனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தனியான அமைச்சர் இல்லாத நிலை தொடர்ந்துவந்துள்ளது.
மாவட்டத்திற்கு தனி அமைச்சர் இருந்தால் வளர்ச்சி பணிகள் விரைந்து நடைபெறும் எனக் கருதும் கட்சியினர், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக தலைமை மீது அதிருப்தியடைந்துள்ளனர். “மற்ற மாவட்டங்களுக்குத் தலா ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்ட நிலையில், எதற்காக கள்ளக்குறிச்சி மட்டும் புறக்கணிக்கப்படுகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.