நாகப்பட்டினத்தில் காசநோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்க ‘ஜோஸ் குழு’ தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நடவடிக்கை
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சுகாதாரத் துறை சார்பில் காசநோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்கும் நோக்கத்துடன் மாணவர்களைக் கொண்ட ‘ஜோஸ் குழுவை’ மாவட்ட ஆட்சியர் .பிரவீன் குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவ சிகிச்சையுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் சமூகப் பங்களிப்பும் மிக அவசியம் என்றார். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மூலம் குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வை எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும் எனக் குறிப்பிட்டார். மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் சுகாதாரமற்ற சூழல் போன்றவை இந்நோய்க்கு முக்கியக் காரணங்களாக உள்ளதால், சத்தான உணவும் முறையான பரிசோதனையும் அவசியம் என அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக 39 ஊராட்சிகளில் காசநோய் பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என்று பாராட்டு தெரிவித்த ஆட்சியர், வரும் ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளையும் காசநோய் இல்லாத ஊராட்சிகளாக மாற்றுவதே இலக்கு என்றார்.
தொடர்ந்து, காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிய ஆட்சியர், மாணவர்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். மேலும், காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு, கையெழுத்து இயக்கமும் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் மரு. உமா, துணை இயக்குநர்கள் மரு. ராஜா, மரு. பிரதீப் வ.கிருஷ்ணகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மோகனசுந்தரம், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.















