தமிழகத்தில்
குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்பை பெற்ற ஆட்சி* த.வெ.க*.
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் அமைந்திருக்கின்ற தந்தை பெரியார் அறிவகத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய நூல்கள் குறித்த சர்ச்சை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.300 கோடி செலவில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த நூலகம் அறிவையும், பகுத்தறிவையும் வளர்க்கும் அறிவு கருவூலமாக திகழ வேண்டுமே தவிர போலி நூல்களையும், வரலாற்று திரிபுகளையும் கொட்டி வைக்கும் இடமாக மாறி விடக்கூடாது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
வருகிற 17-ந் தேதியன்று சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடக்கூடிய ஒரு போராட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடத்த இருக்கிறோம். நீண்ட காலமாக சிறையில் இருக்கக்கூடிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் இப்போது நடைமுறையில் இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசமைப்பு சட்டம் தந்திருக்கக்கூடிய உரிமையின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவக்கூடிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் அந்த இடஒதுக்கீடு பொருந்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும், இந்த 2 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகிறோம்.
தீபாவளியை முன்னிட்டு இதுவரை 5 காட்சிகள் மட்டுமே இருக்கக்கூடிய திரைப்பட காட்சிகள் தற்போது 6 காட்சிகளாக நீடிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மையிலேயே காலையில் ஆரம்பித்து இரவு 2.30 மணி வரைக்கும் இந்த காட்சிகள் இருக்கக்கூடிய ஒரு சூழலில் இரவில் திரைப்படத்தை பார்த்துவிட்டு மக்கள் பாதுகாப்பாக இல்லம் செல்லக்கூடிய அளவுக்கு ஒரு பாதுகாப்பான தமிழ்நாடு இன்றைக்கு இல்லை. எனவே 5 காட்சிகளோடு நிறுத்த வேண்டும்.
உலகளாவிய அளவில் தீவிர வலதுசாரி அரசியல், அதாவது இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வெறுப்புணர்வை வைத்து அரசியல் செய்யக்கூடியவர்களுடைய ஆட்சிகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. வெறுப்புணர்வை ஊட்டி அதன் மூலமாக அரசியல் லாபம் பெறக்கூடிய அந்த நிலை உலகளாவிய அளவில் மாறி வருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத்தான் இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சியின் தோல்வியும், அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான கட்சிக்கு இப்போது நடைபெற்ற இடைக்கால தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவும் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. சிறுமி கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலைமை உள்ளது. த.வெ.க. ஆட்சி, சட்டம்- ஒழுங்கை சரியாக பேணவில்லை. போதைப்பொருள் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்யக்கூடியவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளில் எந்தவித தளர்வும் இருக்கக்கூடாது.
த.வெ.க. அரசு மீதான பல்வேறு புகார்களை மடைமாற்றுவதற்கான வேலையை செய்து வருகிறார்கள். குறுகிய காலத்திலேயே 6 மாதத்திலேயே மக்களின் வெறுப்பை பெற்ற ஆட்சி என்று சொன்னால் அது த.வெ.க. ஆட்சிதான். இந்த ஆட்சியை விஜய் நடத்துகிறாரா அல்லது வேறு ஒரு தரப்பினர் நடத்துகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான் என்ன செய்ய வேண்டும், என்ன பேசுவது என்று தெரியாமல் அமைச்சர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினா







