தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்: மழை ஓய்ந்ததால் குவியும் மக்களால் விற்பனை அமோகம்; வியாபாரிகள் மகிழ்ச்சி
நாகப்பட்டினத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மந்தமடைந்திருந்த விற்பனை, தற்போது மழை ஓய்ந்துள்ளதால் சூடுபிடித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட பண்டிகை பொருட்களை வாங்குவதற்காக நாகை நகரின் முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக நாகை பழைய பேருந்து நிலையம், நீலா கீழவீதி, மேலவீதி மற்றும் பஜார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஜவுளிக்கடைகளில் குடும்பம் குடும்பமாக வந்து புத்தாடைகளை தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக மழை காரணமாக கடைவீதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடைபெறாத நிலையில், தற்போது மழை ஓய்ந்ததால் வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். அதேசமயம், தீபாவளிக்கு முந்தைய இறுதிக்கட்ட விற்பனை என்பதால் கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புத்தாடைகள் மட்டுமின்றி பட்டாசுகள், இனிப்புகள், பலகாரங்கள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் நாகை கடைவீதிகள் முழுவதும் பண்டிகை உற்சாகம் களைகட்டியுள்ளதுடன், வியாபாரமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.








