“நீங்கள் 3 குழந்தை பெத்துக்கணும்னு சொன்னா நான் பெத்துக்கணுமா? அந்த குழந்தையை யார் வளர்ப்பா?” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்திய கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “உணவு, உடை, மதம், வழிபாடு, குழந்தை பெற்றுக் கொள்ளுதல் எல்லாம் தனிமனித உரிமை. இதையெல்லாம் சேர்த்துதான் சுதந்திரம் என்போம். நீங்கள் சொன்னதற்காக மூன்று குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் குழந்தைகளுக்கு சோறு, கல்வி, வேலை யார் தரப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அவர் தொடர்ந்து, “கல்வி, மருத்துவம், மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் எல்லாம் தனியார்மயமாகிவிட்டது. வீடு இல்லாமல் தார்பாய் போட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள், எப்படி மூன்று குழந்தையை வளர்க்க முடியும்? நாடெங்கும் மது, போதைப்பொருள் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் குடும்பங்களை சுமைக்கு உட்படுத்தக்கூடிய பரிந்துரை இது,” என்றார்.
மேலும், “இந்த மூன்று குழந்தை கொள்கை இந்துக்களுக்கு மட்டும் தானா, அல்லது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் பொருந்துமா? அதற்கான தனி சட்டம் கொண்டு வரப் போகிறீர்களா? மக்கள் வாழும் வாழ்க்கைச் சிரமங்களை பார்க்காமல் இப்படி உத்தரவுகள் சொல்வது எவ்வளவு பொருத்தம்?” எனவும் சீமான் விமர்சித்தார்.
இதற்கிடையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில், “ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும். மக்கள்தொகை குறைந்த சமூகம் அழிந்துவிடும். சமூக வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் மக்கள் தொகை சமநிலை அவசியம்,” எனக் கூறியிருந்தார்.
மோகன் பாகவத்தின் இந்தக் கருத்து, அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் மக்கள்தொகை வளர்ச்சி அவசியம் என ஆதரிக்க, பலர் மக்கள் வாழ்வாதாரச் சிரமங்களை முன்னிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.