பெங்களூரு :
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன், நீதிபதியிடம் “இவ்வாறு வாழ முடியவில்லை… தயவு செய்து எனக்கு விஷமாவது கொடுங்கள்” என்று வேதனையுடன் முறையிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் இழிவுபடுத்திய விவகாரத்தில் ரேணுகாசுவாமி என்பவரை கடத்தி கொலை செய்ததாக தர்ஷன் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாதாந்திர வழக்கு விசாரணையின் போது தர்ஷன், சிறையிலிருந்தபடியே காணொளி வாயிலாக 64-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது அவர், “பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. உடையில் துர்நாற்றம் வீசுகிறது. இத்தகைய சூழ்நிலையில் உயிருடன் இருக்க முடியவில்லை. எனக்கு விஷம் கொடுத்து விடுங்கள்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதி, “அப்படிப்பட்ட கோரிக்கை சாத்தியமில்லை” என்று மறுத்தார். மேலும், சிறை விதிகளின் படி தர்ஷனுக்கு நடைபயிற்சி மற்றும் வெளியில் சற்று நேரம் செலவிட அனுமதி வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர், வழக்கு விசாரணை வரும் 19ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.