2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா கடந்த ஏப்ரல் 29 நியூடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில், 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கபட்டு, முதற்கட்டமாக 71 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், மக்கள் மனங்களில் தனி இடம் பிடித்திருக்கும் அஜித் குமார், பத்ம பூஷன் விருது பெறும் கௌரவத்தை பெற்றார். குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவிடம் இருந்து விருதை பெற்ற அவர், விருதுக்குப் பின் அளித்த பேட்டியில் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.
“நான் இன்னும் இதயத்தில் ஒரு எளிய நடுத்தர வர்க்க நபராக இருக்கிறேன். இங்கு இருப்பது மற்றும் இந்த உணர்வுகளை அனுபவிப்பது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். என் வேலையில் மேலும் கவனம் செலுத்துகிறேன். என் நெறிமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து முன்னேற விரும்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.
மேலும், பட்டங்களிலும் புகழிலும் ஆசை இல்லாமல், எளிமையான வாழ்வியல் அவரின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, அஜித் பதிலளிக்கையில்,
“நான் என் பெயருடன் சேர்க்கப்படும் பட்டங்களை விரும்பவில்லை. ‘அஜித்’ அல்லது ‘ஏ. கே.’ என்றுதான் அழைக்கப்பட விரும்புகிறேன். நடிகர் என்பது ஒரு தொழில், அதை நான் முழுமையாக செய்கிறேன். எனக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காகவே அந்த வேலை. புகழும் அதிர்ஷ்டமும் நீங்கள் செய்வதற்கான ஒரு பரிசு மட்டுமே. கடந்த 33 ஆண்டுகளாக நான் என் வேலையை நேசித்து செய்கிறேன். என் வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன். அதிக சிந்தனைகளுக்கு இடமளிக்கவில்லை. ஒரே நேரத்தில் பல விஷயங்களை திட்டமிடுவதில்லை. எனது வேறு பொழுதுபோக்குகள், ஆர்வங்கள் மீது கவனம் செலுத்துகிறேன்” என்றார்.
தன்னடக்கத்தையும் நேர்மையையும் வழிகாட்டியாகக் கொண்ட அவர், இன்றைய நாட்களில் இன்னும் பலருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் என்பதில் மாற்றமில்லை.