விழுப்புரம் : செஞ்சியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டம் இடையூறுக்குள்ளானது. தன் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதாகக் கூறிய நிர்வாகி ஒருவர் நிகழ்ச்சியில் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில், மேல்மலையனூர் ஒன்றியத்தின் முன்னாள் துணைச் செயலாளராக இருந்த சரண்ராஜ், “கழகமே நீதிவேண்டும்”, “செஞ்சி தொகுதி நிர்வாக பிரச்சினையை கேள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள், பேனர்களுடன் முழக்கம் எழுப்பினார்.
இதனால், அங்கிருந்த மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் திருமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள், சரண்ராஜ் மற்றும் அவரது குழுவினரை தடுத்து நின்று பதாகைகளை பிடுங்கி எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதில் விஜய் படத்துடன் இருந்த ஒரு பதாகையை சிலர் காலால் மிதித்தது கூட கூட்டத்தில் பரபரப்பை அதிகரிக்கச் செய்தது.
இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் வழங்கப்படவிருந்த நலத்திட்ட உதவிகளை முழுமையாக வழங்க முடியாமல், பொதுச்செயலாளர் ஆனந்த் இடைத்தில் வெளியேறினார்.
தவெக் மாநில மாநாட்டை ஒருமாதத்தில் நடத்த திட்டமிட்டு கட்சி தீவிரமாக பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் நேரத்தில், செஞ்சியில் நடந்த இந்த நிகழ்வு கட்சியின் உள்ளடக்க பிரச்சினையை வெளிக்கொணர்கிறது.