திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. இன்று தீர்ப்பு வழங்கிய அவர்கள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில், தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டனர். இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றார். அரசியல் உள்நோக்கத்தோடு, பிஜேபியின் தலையீட்டின் பேரில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளாக அந்த தூணில் தீபம் ஏற்றவில்லை. திருப்பரங்குன்றத்தில் வழக்கத்தில் இல்லாத ஒன்றை, நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும் என, மக்கள் கேட்பதாகவும், அமைச்சர் ரகுபதி கூறினார்.
