திருத்துறைப்பூண்டி – சென்னை தேசிய நெடுஞ்சாலையானது, திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை வழியாக செல்லும் மிக முக்கிய மாநில நெடுஞ்சாலை. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த சாலையில் சேந்தமங்கலம் இ.பி.காலனி பகுதியில் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்து வாகனங்கள் இயக்க முடியாத அளவிற்கு சேதம் அடைந்துள்ளது. இதனை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை திருவாரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வெகுண்டெழுந்த இப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து அவ்வழியாக சென்ற பேருந்தை குறுக்கே நிறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் சாலை போடப்படும் என வாக்குறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் ஒரு மாதம் ஆகியும் சேந்தமங்கலம் பகுதியில் சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் ஒன்றிணைந்து தமிழக வெற்றி கழகத்தினருடன் இணைந்து மீண்டும் இரண்டாவது முறையாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் சாலை சீரமைப்பதை உடனடியாக துவக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி சாலை மறியலை தொடர்ந்தனர்.
சாலை உடனடியாக சீரமைக்க விட்டால் நடுரோட்டில் பொங்கல் வைப்போம். சாலை பள்ளங்களில், கல்லை வைத்து அதில் பொங்கல் பானை வைத்து, பொங்கல் வைக்கும் சாலைகள் படுமோசமாக கொண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த சாலையில் தினம் தினம் விபத்துக்கள் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே உறுதி அளித்தபடி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை போடாததன் காரணமாக மீண்டும் தற்போது சாலை மறியல் செய்து கொண்டிருக்கிறோம் என அப்பகுதி மக்கள் கடும் ஆவேசத்துடன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
அதை தொடர்ந்து திங்கள்கிழமை சாலை கண்டிப்பாக சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் மூன்று மணி நேரத்திற்கு பிறகு சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக திருத்துறைப்பூண்டி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சாலையை சீரமைக்க கோரி நடைபெற்ற சாலை மறியலின் போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. உடனடியாக பொதுமக்கள் ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டு பிறகு மீண்டும் சாலை மறியலை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
















