பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு, கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டின் அறிக்கையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெயரைக் குறிப்பிடாமல் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கவின் வரி விதிப்பு நடவடிக்கை உலக அளவில் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், உலக வர்த்தக நிறுவன விதிகளுக்கு எதிராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை. இந்த எச்சரிக்கைக்கு கவனம் செலுத்துவோர்க்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியாவும் ஓர் அங்கம் என்பதால் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.