தமிழ்நாட்டில் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிஸா, மேற்கு வங்க கடலோரப்பகுதிக்கு நகரக்கூடும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜூன் 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 மற்றும் ஜூலை 1 மற்றும் 2-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version