கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு ; ‘தக் லைஃப்’ பேனர்கள் கிழிப்பு !

பெங்களூர் :

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘தக் லைஃப்’, நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருப்பதோடு, ஜூன் 5ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்து, தற்போது சமூக வலைதளங்களில் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியதாவது :

“சிவராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் உங்கள் மொழி (கன்னடம்). நீங்களும் அதில் உட்படுவீர்கள்.”

இந்தக் கருத்து கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“தாய்மொழியை நேசிக்க வேண்டும். ஆனால் அதற்காக பிற மொழிகளை அவமதிப்பது அநாகரிகம். கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்த கமல்ஹாசன், தனது தமிழ்ப்பற்று காட்ட, சிவராஜ்குமாரையும் இணைத்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவத்தின் உச்சம்.

2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று பாரம்பரியமுள்ள கன்னடத்தை இழிவுபடுத்துவது மிக மோசமான செயல். நடிகர் கமல்ஹாசன் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பெங்களூரில் ஒட்டப்பட்டிருந்த ‘தக் லைஃப்’ பட பேனர்கள் சில கன்னட அமைப்பினரால் கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version