‘மெட்ராஸ் ஐ’ (Madras Eye) என்பது மழைக்காலங்களில் அதிகமாக கண்களில் பரவும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று ஆகும். சில தொற்றுகள் சாதாரணமானவையாக இருக்கும், சில தொற்றுக்கலோ கண் பார்வையை பறிக்கும் அளவுக்கு வீரியம் கொண்டவை என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
மெட்ராஸ் ஐ பொதுவாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று மூலம் தான் பரவும். நூற்றுக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருந்தாலும் அதில் சிலவற்றால் தான் கருவிழி பாதிக்கப்படும். இந்தக் கண் நோய்க்கு முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் சரியாகிவிடும். மழை மற்றும் குளிர்கால பருவங்களில் தான் இது அதிகம் ஏற்படுகிறது.
மெட்ராஸ் ஐ அறிகுறிகள் :
- கண் சிவந்து வலி, எரிச்சல் ஏற்படும்
- கண் உறுத்தல் மற்றும் அரிப்பு
- தூங்கி எழும்போது கண்கள் ஒட்டிக் கொள்வது
- அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாது
- சில சமயங்களில் மெட்ராஸ் ஐ-யை ஏற்படுத்தும் வைரஸால் ஜலதோஷம் வரும்
- குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படும்
மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி ?
கண் தொற்று பரவாமல் தடுக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
கைகளால் கண்களை தேய்க்க வேண்டாம் இல்லையெனில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளன.
தொற்று இருக்கும்போது பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
கண்ணாடி அணிவதன் மூலம் தொற்றுப் பரவுவதைத் தடுக்கலாம்.