யூடியூபரின் அநாகரிகக் கேள்வி சர்ச்சை – கௌரி கிஷனுக்கு திரையுலகமும் ரசிகர்களும் ஆதரவு!

நடிகை கௌரி கிஷனை நோக்கி யூடியூபர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கேட்ட அநாகரிகமான கேள்வி தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிரமாக விமர்சிக்கப்படுகிறது.

நடிகை கௌரி கிஷனுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர் !

இதுகுறித்து நடிகை குஷ்பு, “பெண் நடிகையின் உடல் எடையை கேள்வி எழுப்புவது மிகுந்த அவமதிப்பு. கௌரி அதற்கு தைரியமாக பதிலளித்தது பாராட்டத்தக்கது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நடிகை ரோகிணி, “நடிகைகளின் திறமைக்கேற்ப கேள்விகள் கேட்க வேண்டும். உடல் தோற்றம் குறித்து கேள்வி கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாதது,” எனக் கூறி கௌரிக்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்.

பாடகி சின்மயியும், “கௌரி அந்த சூழ்நிலையை மிகுந்த நிதானத்துடன், மரியாதையுடன் கையாள்ந்தார். இளம் வயதிலேயே தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் என்பது பெருமைக்குரியது,” என்று பாராட்டியுள்ளார்.

இயக்குனர் பா. ரஞ்சித், “அந்த யூடியூபரின் நடத்தை வெட்கக்கேடானது; பத்திரிகையாளர் போர்வையில் பெண்களை அவமதிப்பது ஒப்புக்கொள்ள முடியாதது,” எனக் கடுமையாக கண்டித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கமும் இச்சம்பவத்தை தீவிரமாகக் கண்டித்து, “இத்தகைய அவமதிப்பான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதவாறு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என உறுதியளித்துள்ளது.

மேலும், சென்னை பத்திரிகையாளர் மன்றமும் வெளியிட்ட அறிக்கையில், “ஒருவரின் உடல் எடையை கேலியாக மாற்றும் நோக்கத்துடன் கேள்வி கேட்பது அருவருப்பான செயல். கௌரி எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் யூடியூபர் அதனை நியாயப்படுத்தி வாதிடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது,” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் #StandWithGouriKishan என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. பலரும் கௌரியின் தைரியத்தையும் நிதானத்தையும் பாராட்டி பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version