பாலிவுட் நடிகை திஷா பதானியின் உத்தரப்பிரதேசம் பரேலியில் உள்ள வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை சிறப்பு அதிரடிப் படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.
செப்டம்பர் 12-ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில், அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திஷா பதானி வீட்டை நோக்கி 8–10 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வெளிநாட்டு தயாரிப்பு பிஸ்டல் பயன்படுத்தப்பட்டதாகவும், நடிகையின் தந்தை புகார் அளித்திருந்தார். பின்னர், வீட்டிற்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை தொடங்கினர்.
இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு பிரபல குற்றக்கும்பல் தலைவன் கோல்டி பிரார் குழுவினர் பொறுப்பு ஏற்றனர். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், திஷா பதானி மதத்திற்கு அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, ‘இந்த துப்பாக்கிச் சூடு ஒரு ட்ரெய்லர் மட்டுமே’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சம்பவத்துக்கான பின்னணி, திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி மற்றும் சில இந்து சாமியார்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதலாகும். அந்த சர்ச்சையிலிருந்தே தாக்குதல் முயற்சி நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
புதிதாக, பரேலி அருகே நடந்த மோதலில், ரோஹ்தக் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் மற்றும் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் ஆகியோர் STF-க்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. நடந்த துப்பாக்கிச் சண்டையில் இருவரும் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம், திஷா பதானியின் வீட்டில் நடந்த தாக்குதல் விவகாரத்தில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. தற்போது, குற்றவியல் விசாரணை தொடர்கிறது.
















