ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் தலைமை ஆசிரியர், ஒரு உளவியல் நிபுணர், ஒரு சட்ட நிபுணர் கொண்ட ஒரு குழு தான் ஆசிரியர் மீது புகார் கொடுக்க வேண்டும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்:- மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு:-
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் ஆசிரியர் தின விழா, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நேஷன் மேக்கர் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், புதுச்சேரி அரசு கட்டணக்குழு தலைவருமான விமலா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தனது மகன் ஒழுக்கமுள்ள மாணவனாக வர வேண்டும் என்று விரும்பிய தலைமுறை மாறி, தனது மகனை ஆசிரியர்கள் கண்டிக்கக் கூடாது என இந்த தலைமுறை மக்கள் நினைக்கிறார்கள். நிறைய நாடுகளில் 14 வயதுக்குள்பட்ட பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் இங்கு அதேபோல் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. போக்சோ சட்டத்தின்படி பள்ளியில் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டால் அல்லது உட்படுத்தக்கூடும் என்ற சந்தேகம் இருந்தால்கூட, உடனடியாக ஆசிரியர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்ல வேண்டும். ஒருவேளை நீங்கள் இதை செய்யத் தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்திற்கு நீங்கள் உட்பட்டவர்கள். ஆனால் இக்குற்றத்தை வெளிப்படுத்தக் கூடாது என பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். சட்டம் அனுசரணையாக இல்லாத சமயத்தில் சமுதாயம் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். ஒரு ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு வந்தால், மற்றவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள் என்கிற உணர்வு வர வேண்டும் அல்லது சட்டமாவது திருத்தப்பட வேண்டும். ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உளவியல் நிபுணர், ஒரு சட்ட நிபுணர் இவர்களெல்லாம் சேர்ந்த ஒரு குழு தான் புகார் கொடுக்க வேண்டும்னா, அப்ப சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு சிக்கல் இல்லாமல் இருக்கும் என தெரிவித்தார்.













