சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து – ஒரு மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்…
திருவாரூர் நகரின் மையப் பகுதியான தெற்கு வீதி பகுதியில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் பிரபல தனியார் பியூட்டி பார்லர் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் வங்கி ஒன்றும், இரண்டாம் தளத்தில் நிதி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் பியூட்டி பார்லரை திறந்த பெண் ஊழியர்கள் அங்கிருந்த மின் சாதனங்களை இயக்கிய போது, திடீரென மின் கசிவு ஏற்பட்டு பியூட்டி பார்லர் முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் அலறி அடித்துக் கொண்டு பெண் ஊழியர்கள் வெளியேறினர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் பியூட்டி பார்லர் தளம் முழுவதும் புகை பரவி மேல் தளத்திற்கு சென்றது. தொடர்ந்து புகை அதிகமாகி திருவாரூர் நகரம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான அழகு சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. இன்று காலை சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல தனியார் மாலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் திருவாரூரில் உள்ள அழகு சாதன நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

















