சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் திரளானோர் பங்கேற்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தில் வீர நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச நரசிம்மர் சேத்திரத்தில் 2வது தலமான இங்கு திருமங்கை மன்னன் குமுதவல்லியை திருமணம் புரிய 1008 வைணவர்களுக்கு ஒரு வருடம் ததி ஆராதனை செய்து பெருமாளின் பேரருளை பெற்று திருமங்கை ஆழ்வார் ஆன திவ்ய தேசமும் திருமங்கை வளநாடு என போற்றப்படும் சேத்திரமே மங்கைமடம் வீர நரசிம்ம பெருமாள் திருக்கோவில். இங்கு பெருமானை சேவித்தால் கிரக தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூடும் மற்றும் சகல தோஷங்களும் நீங்கி அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா பராபவ வருடம் 14ஆம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி ஏற்றத்தை முன்னிட்டு இன்று காலை புனர்பூச நட்சத்திரம் கூடிய 8:15 மணி முதல் 9:00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நரசிம்ம பெருமாள் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருள பட்டாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து நரசிம்ம பெருமானுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 20ம் தேதி மாலை திருகல்யாண வைபவம், 22 ஆம் தேதி தேரோட்டம், தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 23ஆம் தேதி ஸ்ப்தாவராணமும், கொடி இறக்கமும், 24 ஆம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.













