கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட செலக்கரச்சல், இடையர்பாளையம், போகம்பட்டி, வடவள்ளி மற்றும் திம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் விவசாயத்தைச் செழுமையாகக் கொண்ட பகுதிகளாகும். இங்கு நிலவும் மண்வளத்திற்கு ஏற்ப மக்காச்சோளம், பல்வேறு வகை கீரைகள், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் ஊடுருவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதால், அறுவடைக்குத் தயாராக உள்ள பயிர்கள் இரவு நேரங்களில் கடுமையாகச் சேதப்படுத்தப்படுகின்றன. இந்தாண்டு போதிய மழைப்பொழிவு இல்லாத நிலையிலும், கடன் வாங்கியும் அதிகச் செலவு செய்தும் பயிர்களைக் காப்பாற்றப் போராடி வரும் விவசாயிகளுக்கு, காட்டுப்பன்றிகளின் இந்தத் தாக்குதல் பேரிடியாக அமைந்துள்ளது.
காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாகத் தோட்டங்களுக்குள் புகுந்து மக்காச்சோளத் தட்டுகளைச் சாய்த்தும், காய்கறிப் பயிர்களை வேரோடு கிளறியும் நாசப்படுத்தி வருகின்றன. இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் வனத்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரை எவ்வித உருப்படியான தீர்வும் எட்டப்படவில்லை. வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டுச் சென்றதோடு சரி, பன்றிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்கவோ அல்லது வனப்பகுதிக்குள் விரட்டவோ எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை எனப் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வனத்துறையின் இத்தகைய அலட்சியப்போக்கால், லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதோடு, தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்பதாகக் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.
வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும், விளைநிலங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். காட்டுப்பன்றிகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த வனத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சுல்தான்பேட்டை பகுதி விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய அளவிலான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

















