அரசு நிதியில் நடத்தப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் குற்றச்சாட்டு:- அரச பங்களிப்போடு 77 லட்சம் நிதியில் செயல்படும் நிறுவனத்தில் 700 பேர் பங்குதாரராக உள்ள நிலையில் 13 பேருக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிகர லாபமாக ரூ.875 மட்டுமே கணக்கு காட்டி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் விவசாய விளைபொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு நிதி ரூ.60 லட்சம், மத்திய அரசு நிதி ரூ.7 லட்சம் மற்றும் உறுப்பினர்கள் இதரநிதி ரூ.10 லட்சம் என ரூ.77 லட்சம் நிதியுடன் செயல்படும் இந்நிறுவனத்தில் 700 பங்குதாரர் உள்ள நிலையில் 13 பேருக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.43 லட்சம் செலவு செய்ததாகவும், வெறும் 875 ரூபாய் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளதாகவும் கணக்கு காட்டி மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் விவசாயிகள் மனு அளித்து புகார் தெரிவித்தனர். நிறுவனத்தின் விதிமுறைப்படி பொதுக்குழு கூட்டங்கள் முறையாக நடத்தப்படவில்லை என்றும் இயந்திரங்கள் வாங்கியதிலும் கொள்முதல் குழு அமைத்ததிலும் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த நிறுவனத்தின் கணக்குகளை முழுமையாக மறு ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாக குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.















