மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டு இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த் வழங்கினார்:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றவேண்டியும், வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை வழங்கக்கோருதல், என மொத்தம் 127 மனுக்கள் அளித்தனர். இம்மனுக்களை சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார். தொடர்ந்து அடியாமங்கலம் கிராமத்தில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் காதலன் வைரமுத்து என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் காதலியின் தாயார் சகோதரர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். காதலியின் தாயார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வைரமுத்துவின் சகோதரி குழல்வாய்மொழிக்கு வாரிசு அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் பணியாற்ற கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று வழங்கினார். அப்போது நேர்முக உதவியாளர் (பொது)முத்துவடிவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்(பொ) மலைமகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ஹரிதரன் மற்று அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.













