ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநரின் பட வாய்ப்பை நிராகரித்த ஃபகத் பாசில் – காரணம் என்ன ?

இந்திய திரையுலகில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவரும் மலையாள நடிகர் ஃபகத் பாசில், ஒரு ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநரின் பட வாய்ப்பை மறுத்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபகத் பாசில் நடிப்பில் உருவான “ஓடும் குதிரா சாடும் குதிரா” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர பேட்டியில், நடிகர் பகிர்ந்த ஒரு சம்பவமே சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மெக்சிகோவைச் சேர்ந்த ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் அலெஹான்ட்ரோ இனாரிட்டு (Amores Perros, 21 Grams, Birdman, The Revenant போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர்) நேரடியாக வீடியோ காலில் ஃபகத் பாசிலைத் தொடர்பு கொண்டு தனது அடுத்த படத்தில் நடிக்க அழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வாய்ப்பை தானே மறுத்ததாக ஃபகத் பாசில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

“இனாரிட்டு எதிர்பார்க்கும் வகையில் மொழி உச்சரிப்பை எடுத்து செல்ல நான் தயாராக இல்லை. அதற்காக குறைந்தது நான்கு மாதங்கள் அமெரிக்காவில் தங்கி பயிற்சி பெற வேண்டும்; அதற்கான செலவையும் நிறுவனம் ஏற்காது என்று கூறப்பட்டது. எனவே அந்த வாய்ப்பை நான் நிராகரித்தேன்.”

மேலும், தனது வாழ்வின் “மேஜிக்” தருணங்கள் அனைத்தும் கேரளாவில் தான் நடந்ததாகக் கூறிய அவர்,

“எந்த மாற்றமும், எந்த அற்புதமும் நடந்தாலும் அது கேரளாவிலேயே நிகழ வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை” என்றார்.

இதனால், ஹாலிவுட் வாய்ப்பை கூட தன் சொந்தநாட்டின் மீதான பற்றுக்காகத் துறந்த ஃபகத் பாசிலின் முடிவு, ரசிகர்களிடையே பெரும் பேச்சுப்பொருளாகியுள்ளது.

Exit mobile version