லோகாபுரத்தில் மின்சார பற்றாக்குறை – டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மனு
ராணிப்பேட்டை மாவட்டம்:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த லோகாபுரம் கிராமத்தில் போதிய மின்சாரம் கிடைக்காமல் அவதியடைந்து வரும் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
லோகாபுரம் கிராமத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை தொடங்கினர்.
ஆனால், தனிநபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த மூன்று மாதங்களாக போதிய மின்சாரம் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லோகாபுரம் கிராம மக்கள் கலந்து கொண்டு, உடனடியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்சார பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.







