கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை நிரூபிக்கப்படாத குற்றசாட்டு எனக்கூறி 13 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு:- காவல்துறையினர் சரியாக புலன் விசாரணை செய்யவில்லை என்றும் மிகத் தாமதமாக கிடைத்த நீதி என்றும் வழக்கறிஞர் பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் வாசு. இவர் 2012-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து வாசுவின் சகோதரர் வாசுதேவன் என்பவர் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் மார்ச் 16-ஆம் தேதி புகார் அளித்திருந்த நிலையில், அதற்கு மறுநாள் வாசுவின் உடல் பழையாறு கடற்கரையில் கரை ஒதுங்கியது. இந்த வழக்கில் முன்விரோதம் காரணமாக பழையாறு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், கணேசன், கோவிந்தராஜன் ஆகிய மூன்று பேர் வாசுவை பழையாறு கடற்கரைக்கு வரவழைத்து கொலை செய்ததாக போலீசார் கொலை வழக்கு பதிவுசெய்து மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட மாரியப்பன், கணேசன், கோவிந்தராஜன் ஆகிய மூவருக்கும் வாசு உயிரிழந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என கூறி அந்த மூவரையும் நீதிபதி விடுதலை செய்தார்.
இதுகுறித்து, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகிய வழக்கறிஞர் சங்கர் கூறுகையில், புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மிகத் தாமதமாக நீதி கிடைத்துள்ளது. காவல்துறையினர் சரியாக புலன்விசாரணை செய்யாமல் அப்பாவிகள் மூவரை கைது செய்தனர். கொலைக்கான ஆதாரமாக அரசுத்தரப்பில் தாக்கல் செய்த வாசுவின் இறப்புச்சான்றிதழ், வாசு ஓட்டிச் சென்றதாக கூறப்பட்ட இருசக்கர வாகனம், வாசுவின் சகோதரர் கொடுத்த அஞ்சலி விளம்பரம் ஆகிய மூன்றும்தான் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற உதவியது. 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த அவர்கள் நீதிமன்றத்துக்கு அலைந்த 12 வருடங்கள்தான் இந்த வழக்கில் அவர்கள் அனுபவித்த மிகப்பெரிய தண்டனை என்றார்.