தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதல்வர் அறிவித்துள்ள ரூ.3000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தடையின்றி வழங்குவதற்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டோக்கன் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இன்று (ஜனவரி 6, 2026) நேரில் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைப் பகுதிகளில், வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்குத் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரொக்கப் பணமாக ரூ.3000/- வழங்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் மொத்தம் 765 நியாயவிலைக் கடைகள் மூலம் 5,80,073 குடும்பங்களுக்கு இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.”
மேலும், இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் ஜனவரி 8, 2026 முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில், நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் காத்திருப்பதைத் தடுக்கவும் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ், மிகவும் பின்தங்கிய மற்றும் தகுதியுள்ள குடும்பங்களுக்குக் குடிமைப் பொருட்களுடன் பொங்கல் பரிசுகளையும் நேரடியாக இல்லங்களுக்கே சென்று வழங்கும் நடைமுறையையும் ஆட்சியர் இன்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கரும்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியர், கரும்புகள் அனைத்தும் தரமானதாகவும், முழு நீளத்திலும் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் தங்களின் அட்டைக்குரிய கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசினைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், விடுபட்டவர்களுக்குப் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். பொங்கல் பரிசுடன் ரூ.3000 ரொக்கம் வழங்கப்படுவது, குமரி மாவட்ட பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

















