சென்னை :
கரூர் சம்பவத்துக்குப் பின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தலைமறைவாக இல்லை என்று இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தவெக முதல் நிர்வாகக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் தற்போதைய நிலை, அமைப்பு வலுவூட்டல் மற்றும் வரவிருக்கும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கரூர் சம்பவத்துக்கு பின் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் தலைமறைவாக உள்ளனர் என சமூக வலைதளங்களில் பலரும் கூறியிருந்தனர். குறிப்பாக ராஜ்மோகன் குறித்து பல மீம்ஸ் பரவி, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படாதபோதும் ஏன் மறைந்தார் என்ற கேள்விகள் எழுந்தன.
இதற்கிடையில், கூட்டத்தில் கலந்துகொண்ட ராஜ்மோகன் பேசியபோது, “கரூர் சம்பவத்துக்குப் பிறகு இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கு சம்பவ இடத்திற்கு செல்வதற்கே அனுமதி அளிக்கப்படவில்லை. நான் திருச்சி நெடுஞ்சாலையில் தனியாக தங்கி இருந்தேன். அதன்பின் கட்சி நீதிமன்ற வழிமுறைகளில் முன்னேறியது. அமைதியே நீதியின் உண்மையான வடிவம் — அதற்காகவே நாங்கள் அமைதியைத் தேர்ந்தெடுத்தோம்,” என்றார்.
அவர் மேலும், “அமைதியாக இருந்தால் அவதூறுகள் வரலாம், ஆனால் அதனை கடந்து தான் அரசியல் செய்ய வேண்டும். மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; அதற்கான பாதையில் தான் நாங்கள் செல்கிறோம்,” என்றும் கூறினார்.
அதேவேளை நிர்மல் குமார் கூறியதாவது, “தவெகவில் யாரும் தலைமறைவாக இல்லை. சில நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தது மட்டுமே. 41 குடும்பங்களை நேரில் சந்திப்பது எங்கள் அடுத்த கட்ட நோக்கம். சிலர் கட்சியை முடக்க முயன்றாலும், நீதிமன்றம் மூலம் அது தோல்வியடைந்தது. பெரும்பாலான நிர்வாகப் பொறுப்புகள் நிரப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள மாவட்டங்களிலும் விரைவில் நியமனங்கள் நடைபெறும்,” என்றார்.
















