இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இது ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ஆகும்.
இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ‘பைசன்’ திரைப்படம் 2025 அக்டோபர் 17ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்திற்கான திட்டத்தையும் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, அவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது தனுஷின் 56வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றுகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசும் போது மாரி செல்வராஜ் கூறியதாவது :
“கர்ணன் திரைப்படத்தின் போது இந்த புதிய படத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டு இருந்தது. இப்போது அதன் நேரம் வந்துள்ளது. ‘பைசன்’ திரைப்படத்திற்குப் பிறகு, தனுஷுடன் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவிருக்கிறது. இது என் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும்” என்றார்