சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் அளித்தனர். புகாரை பதிவு செய்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இடும்பாவனம் கார்த்திக், “தெனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீமான் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ‘சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும்’, ‘ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விரைவில் போட்டி நிலவும்’, ‘நாம் தமிழர் அலுவலகத்திற்கு இரங்கல் செய்தி வரும்’ எனவும், ‘தெலுங்கு மக்களை தவறாக பேசியது மரணத்துக்கு காரணமாகும்’ எனவும் பதிவிட்டுள்ளார்,” என்றார்.
இத்தகைய கருத்துக்கள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், கட்சி தலைவரின் உயிருக்கு ஆபத்தாகவும் இருக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “சீமான் எப்போதும் எந்த இனத்தினரையும், குறிப்பாக தெலுங்கு மக்களையோ, தேசிய இன மக்களையோ அவதூறாக பேசியதில்லை. மாறாக, பல தேசிய இனத்தினரும் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராகவும், முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, இந்த தவறான பதிவுகளைச் செய்த சந்தோஷ் உட்பட நான்கு பேர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்றார் கார்த்திக்.