சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் விழுந்த மின்கம்பியை மிதித்ததால், தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“வரலட்சுமி உயிரிழந்ததன் காரணமாக அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையை வளர்ச்சியடைந்த நகரம் எனப் புகழ்ந்த நிலையில், அடுத்த நாளே லேசான மழைக்கே தண்ணீர் தேங்கி, மின்சாரக் கம்பி துண்டிக்கப்பட்டு தூய்மை பணியாளர் உயிரிழந்திருக்கிறார். இது சென்னை மாநகரின் அடிப்படை கட்டமைப்புகள் எவ்வளவு மோசமாக உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த நாள்முதல் மழை நீர் வடிகால் திட்டம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டாலும், எங்கும் நீர் வடிகால் சரியாக செயல்படவில்லை. குறிப்பாக விபத்து நடந்த கண்ணகி நகர் பகுதியில் மின்கம்பிகள் அபாயகரமாக சாலையின் மேல் செல்கின்றன என்று பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் மின்சாரத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே அப்பாவி பெண் தொழிலாளியின் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது. இதற்குப் பொறுப்பு திமுக அரசின்மேல் உள்ளது.
இந்த சம்பவம் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. வரலட்சுமியின் குடும்பத்திற்கு அரசு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இது போதுமானதல்ல. குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இந்த தொகையை முதலமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் மின்துறை அமைச்சர்கள் ஆகியோரிடமிருந்து வசூலித்து வழங்க வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.