நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனுக்கு, கன்னட மொழி மற்றும் கலாசாரம் குறித்து எந்தவிதமான கருத்தும் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், “கன்னடம் என்பது தமிழ் மொழியில் இருந்து தோன்றியது,” என்ற கருத்தை வெளியிட்டார். கன்னட அமைப்புகள் மற்றும் கலாசார இயக்கங்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தது.
கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, “மன்னிப்புக் கூறாத பட்சத்தில் ‘தக் லைப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட அனுமதிக்க மாட்டோம்,” என கன்னட அமைப்புகள் எச்சரித்தன. கன்னட சினிமா வர்த்தக சபையும் இப்படத்தின் வெளியீட்டை தடை செய்யுமென அறிவித்தது.
இதையடுத்து, நடிகர் கமல்ஹாசன், தனது உரிமையை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே நேரத்தில், கன்னட சாகித்ய பரிஷத் என்ற அமைப்பும், “கன்னட மொழி, கலாசாரம் குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கக் கூடாது,” எனக் கோரி பெங்களூருவில் உள்ள கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “நாடு, மொழி, கலாசாரம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது” என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததுடன், மனுவுக்கு ஆகஸ்ட் 30க்குள் பதிலளிக்க நடிகர் கமல்ஹாசனை உத்தரவிட்டுள்ளார்.