‘பிரேமம்’, ‘சார்லி’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துத் தொடங்கி, பின்னர் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் தயாரிப்பாளராகவும் முன்னணி நடிகராகவும் மாறியவர் சௌபின் சாஹிர். உலகளவில் 250 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த படம், 2024 ஆம் ஆண்டு மலையாள திரைத்துறையில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்தது.
ஆனால், இப்படம் மூலம் கிடைத்த வெற்றிக்கேற்ப சௌபின் சாஹிர் சர்ச்சையிலும் சிக்கினார். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ஏழு கோடி ரூபாய் முதலீடு செய்ததாக கூறும் சிராஜ் என்ற தொழிலதிபர், படத்தின் லாபத்தில் 40 சதவீதம் வழங்குவதாக சௌபின் உறுதியளித்தும் பின்னர் பங்கீடு செய்யாமல் ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து எர்ணாகுளம் அருகே உள்ள மரடு காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, சௌபின் சாஹிர் உட்பட மூவருக்கு பணமோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது.
பின்னர், சௌபின் சாஹிருக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதே நேரத்தில், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி துபாயில் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) விழாவில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்திற்காக பங்கேற்க நடிகர் சௌபினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநாடு செல்ல அனுமதி கோரி அவர் நீதிமன்றத்தை அணுகினார்.
ஆனால், அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்க மறுத்தது. இதன் மூலம், சௌபின் சாஹிரின் துபாய் பயணம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.