விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !

‘ஜனநாயகன்’ ,ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க மறுத்திருப்பது, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் விஜய் தரப்பில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழ் சினிமா வட்டாரங்களில் இருந்து பெரிதாக எந்தக் குரலும் எழாத நிலையில், அரசியல் கட்சிகளும் பெரும்பாலும் மௌனம் காக்கின்றன. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை ஜனநாயகத்தை முடக்கும் செயலாக இருப்பதாக விமர்சித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவின் மூலம் இந்த விவகாரத்தில் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில், “ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். அரசியல் விருப்பு–வெறுப்புகளைத் தாண்டி, கருத்துச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இதை எதிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


மேலும், “ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டிலும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பிலும் உருவாகிறது. அரசியல் காரணங்களுக்காக ஒரு படத்தை முடக்க முயல்வது, படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது” என்றும் ஜோதிமணி சுட்டிக்காட்டியுள்ளார்.


தான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், “அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போல, தணிக்கை வாரியமும் தற்போது மோடி அரசின் அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. இதை நாம் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் தணிக்கை வாரியம் காலாவதியான அமைப்பாகிவிட்டதாகவும், ஒரு திரைப்படத்தை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான் என்றும் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி, யூடியூப், சமூக வலைதளங்களில் கட்டுப்பாடில்லா உள்ளடக்கங்கள் பரவி வரும் நிலையில், திரைப்படங்களை மட்டும் தணிக்கை செய்வதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, “தணிக்கை வாரியம் கலைக்கப்பட வேண்டிய அமைப்பாக மாறியுள்ளது. அதுவரை, அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என ஜோதிமணி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version