தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் ரோபோ சங்கர் (46), உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார்.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு
முதலில் மேடைக் கலைஞராக ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்றார். பின்னர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தனுஷ் நடித்த மாரி, விஜய் நடித்த புலி, அஜித் நடித்த விஸ்வாசம், சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
திரைப் பயணம்
2007ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி படத்தில் சிறிய கதாபாத்திரமாக வந்த அவர், 2013ஆம் ஆண்டு வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் “சவுண்ட் சுதாகர்” வேடத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். பின்னர் 2015ல் தனுஷின் மாரி படத்தில் நடித்த “சனிக்கிழமை” கதாபாத்திரம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்பின் பல முக்கிய திரைப்படங்களில் அவர் நடித்த காமெடி காட்சிகள் திரையரங்குகளில் கைதட்டலுக்கு பஞ்சம் இல்லாமல் செய்தன.
தனித்துவமான காமெடி
ரைமிங்குடன் கூடிய நகைச்சுவை உரையாடலே ரோபோ சங்கரின் தனிச்சிறப்பு. ஹீரோக்களோடு இணைந்து அவர் பேசிய டைமிங் காமெடி ரசிகர்களை சிரிப்பில் மூழ்கடித்தது. குறிப்பாக வேலைக்காரன் படத்தில் அவர் பேசிய “அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்… கோழி கொக்கரக்கோனு கூவுச்சு” என்ற வசனம் ரசிகர்களால் இன்னமும் நினைவுகூரப்படுகிறது.
குரலால் கவர்ந்தவர்
நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர் ரோபோ சங்கர். உலகம் முழுவதும் பிரபலமான தி லயன் கிங் அனிமேஷன் படத்தில் “பும்பா” கதாபாத்திரத்துக்கு அவர் அளித்த குரல், தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ் சினிமாவுக்கு சிரிப்பை பரிசாக வழங்கிய ரோபோ சங்கரின் மறைவு, திரையுலகத்தினரும் ரசிகர்களும் வேதனையுடன் நினைவுகூரும் இழப்பாகும்.













