தரங்கம்பாடி அருகே பொறையாரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமுடி மகா சாஸ்தா ஸ்ரீ ஐயனார் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் பிரசித்தி பெற்ற திருமுடி மகா சாஸ்தா ஸ்ரீ ஐயனார் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சியும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பூர்ண புஷ்கலா உடனுறை திருமுடி மகா சாஸ்தா ஸ்ரீ ஐயனார் சிறப்பு அலங்காரத்தில் தேரினுள் எழுந்தருள செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேரானது முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.














