திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரில் அருந்ததியர் காலணியில் அருந்ததியர் அரசியல் அதிகாரம் 2.0 மற்றும் சமூக விடுதலைக்காக என்ற திட்டத்தின் அடிப்படையில் 2000 கிராமங்கள் தொடர் பயணத்தை அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கம் சார்பில் மாநில தலைவர் க. லோகேஷ் குமார் தொடங்கினார். முன்னதாக திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அதிகத்தூரில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும் அரசு மூலம் கிடைக்கக்கூடிய சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கத்தின் மாநில தலைவர் க.லோகேஷ் குமார், தமிழகம் முழுவதும் 2000 கிராமங்களுக்கு சென்று அருந்ததியர் மக்களை சந்தித்து அருந்ததியர் மக்களின் சமூக பிரச்சனைகளை எடுத்துச் சொல்லியும், அவர்களது இட ஒதுக்கீடு பிரச்சனைகளையும் அரசாங்கத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த தொடர் பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும்
தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கப்படும் மூன்று விழுக்காடு முழுமையாக வழங்கப்படாததால் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்துவதாகவும், தமிழ்நாடு அரசு கண்காணிப்பு குழுவை அமைக்க நாங்கள் வலியுறுத்தி வருவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சரிடமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்த அவர், அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கூடும் சட்டப்பேரவையில் அருந்ததியினருக்கு ஆறு விழுக்காடு இட ஒதுக்கீடு அமல் படுத்த வேண்டும் என்றும் அருந்ததியர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் இடம் தெரிவித்திருப்பதாகவும் அதற்காகத்தான் இந்த பயணத்தை தொடங்கி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே அரசியலுக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற மகாஜன சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த மந்தா கிருஷ்ணா மாதிகா என்பவரின் தலைமையில் இந்தியா முழுவதும் பட்டியல் சாதியினரை ஒருங்கிணைத்து புரட்சியாளர் அம்பேத்கரின் கனவை அரசு அதிகாரத்தை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

















