அஜித் விளக்கம் : “எப்போதும் விஜய்க்கு நல்லதே நினைப்பேன்… என் பேட்டி அவருக்கு எதிரானது அல்ல”

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி, நடிகர் விஜய்க்கு எதிரானதாக சில ஊடகங்களில் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜித் குமார் மற்றும் விஜய் இருவரும் தங்கள் துறைகளில் தனித்துப் பெயர் பெற்றவர்கள். தற்போது நடிகர் விஜய் அரசியல் களத்தில் களம் இறங்கி, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மறுபுறம், அஜித் குமார் கார் ரேசிங் துறையில் கவனம் செலுத்தி, சர்வதேச ரேஸ் போட்டிகளுக்குத் தயாராகி வருகிறார்.

சமீபத்தில் கரூரில் நடந்த விஜயின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம் குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அஜித் குமார், “அந்த விபத்துக்குத் தனிநபர் ஒருவரே காரணமல்ல; சமூகமாகவும் ஊடகங்களாகவும் நாம் அனைவரும் பொறுப்பு உடையவர்கள். ரசிகர்களின் அன்பு தேவைதான், ஆனால் உயிரை ஆபத்தில் இட்டுக் கொள்ளக் கூடாது. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஊடகங்கள் ஊக்குவிக்கக் கூடாது,” எனப் பேசியிருந்தார்.

இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக விளக்கப்பட்டன. சிலர் அஜித்தை விஜய்க்கு ஆதரவாகப் பேசியதாகக் கூற, மற்றொரு தரப்பு அவர் விஜய்க்கு எதிராக பேசியதாக குற்றம் சாட்டியது. இதையடுத்து, நடிகர் அஜித் குமார் இன்று அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“ஆங்கில ஊடகத்துக்கு நான் அளித்த பேட்டி இளைஞர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு சேர்க்க வேண்டிய ஒன்று. ஆனால் சிலர் அதை தங்களின் அரசியல் அஜெண்டாவுக்காக மாற்ற முயன்றனர். எனது கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு, நடிகர் அஜித்–விஜய் மோதலாக மாற்றப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே நச்சுக்கலந்த சமூகமாக மாறிவிட்டோம்.”

அவர் மேலும் கூறியுள்ளார்:

“என் பேட்டியை 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் பேசுவார்கள். நான் எப்போதும் என் ரசிகர்களிடம் ‘உங்களையும், உங்கள் குடும்பத்தையும் முதலில் பாருங்கள்’ எனச் சொல்லி வந்துள்ளேன். யாரையும் திரைப்படம் பார்க்கத் தூண்ட மாட்டேன்; ஓட்டுக் கேட்கவும் மாட்டேன். என் பேட்டியை விஜய்க்கு எதிராக மாற்ற முயற்சிப்பவர்கள் அமைதியாக இருப்பது நல்லது. என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்திருக்கிறேன், அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்திருக்கிறேன்.”

இந்த விளக்கத்துடன், நடிகர் அஜித் குமாரின் நிலைப்பாடு தெளிவடைந்துள்ளது. இதனால் விஜயின் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version