தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற இவர், சமீபத்தில் சூரியுடன் நடித்த ‘மாமன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
நடிகை வெளியிட்டுள்ள குறிப்பில், “நெடுநாளாக சமூக வலைத்தளங்களில் இருப்பது என் தொழிலுக்கு முக்கியம் என நினைத்தேன். ஆனால் அதே சமூக வலைத்தளங்கள் என்னை எனது சொந்த சிந்தனைகளிலிருந்து விலக்கி, வேலை மற்றும் தேடல் குறித்த என் திசையை மாற்றிவிட்டது. இது என் சொற்செறிவையும் மொழியையும் பாதித்துள்ளது. எளிய விஷயங்களில் மகிழ்ச்சியை இழக்கச் செய்துள்ளது. இனி, பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு ஓர்வழி மற்றும் சமூக வலைத்தளங்களில் உருவாக்கப்பட்ட விருப்பங்கள் மற்றும் கற்பனைகளுக்கு ஏற்ப வாழ விரும்பவில்லை. நான் என் கலைஞரும், சிறுமியும் இணையத்திலிருந்து தனியாக இருக்க விரும்புகிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் மேலும், “வாழ்க்கையில் அர்த்தமுள்ள தொடர்புகளையும், அர்த்தமுள்ள சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் அர்த்தமுள்ள படங்களை உருவாக்கினால், ரசிகர்கள் பழைய பாணியிலான அன்பைத் தருவார்கள் என்று நம்புகிறேன்,” என தெரிவித்தார்.
இதுபோல், நேற்று நடிகை அனுஷ்கா ஷெட்டி குறைந்தது சில காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
















