விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம், வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியானது, ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த படம் விஜய்க்கு கெரியரில் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ தொடர்பான புதிய அப்டேட் இன்று மாலை வரும் என படத் தயாரிப்பு நிறுவனம் KVN ப்ரொடக்ஷன்ஸ் முன்னதாகவே அறிவித்திருந்தது. நிறுவனத்தினர் பகிர்ந்த டீசரில் ‘Selamat datang’ எனும் மலாய் மொழிச்சொல் (அர்த்தம்: ‘வெல்கம்’) மற்றும் மலேசியாவின் பிரபல இரட்டை கோபுரம் இடம்பெற்றிருந்தது. இதனால் ஆடியோ லாஞ்ச் மலேசியாவில் நடைபெறும் என ரசிகர்கள் கருதி வந்தனர்.
அதேபோல, தற்போது வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்டில், டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட வீடியோவில் மலேசிய விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு, விஜய்யின் திரைப்பயணம் மற்றும் படத்தின் பாடல் பகுதிகளும் இடம்பெற்றிருந்தன.
இதன்மூலம் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தில் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வழக்கமாக விஜய் திரைப்படங்களின் இசை வெளியீடு சென்னையில்தான் நடத்தப்படும். ஆனால் அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக ‘தி கோட்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதையும் ரசிகர்கள் நினைவுபடுத்திக் கொண்டனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு ‘ஜனநாயகன்’ ஆடியோ லாஞ்ச் நடத்தப்படுமா என்ற சந்தேகங்களுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

















