தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று நடைபெறும் ரேக்ளா பந்தயத்திற்கான ஆலோசனைக் கூட்டம்; இதில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு ரேக்ளா பந்தயம் நடத்துவது குறித்து ஆலோசனை.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தில்லையாடி உத்திராபதியார் மற்றும் நாராயணசாமி நினைவையொட்டி காணும் பொங்கல் அன்று மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் ஆண்டுதோறும் காலை தொடங்கி மாலை வரை சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்தாண்டு காணும் பொங்கல் அன்று ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் திருக்கடையூரை சுற்றியுள்ள 8 ஊராட்சிகளை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ரேக்ளா பந்தைய நிர்வாகிகள் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் இந்த ஆண்டு எல்கை பந்தயத்தை நடத்துவது, நிர்வாகிகள் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ,ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, மாடு மற்றும் குதிரைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் விழா குழு அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
















