ரங்காரெட்டி: பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்ததற்காக புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் நடித்த விளம்பரத்தில் காணப்படாத ஒரு இடத்தின் பெயர் குறிப்பிடப்பட்டதாக கூறி, ரூ.34.8 லட்சம் நஷ்டம் அடைந்த ஒருவர் ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மகேஷ்பாபுவுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விளம்பரங்களை நம்பி சொத்து முதலீடுகளில் ஈடுபடும் பொதுமக்கள், சில நேரங்களில் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, நகரங்களின் புறநகர் பகுதிகளை ‘சிட்டி சென்டர்’ என சித்தரித்து விற்கும் சூழ்நிலைகளும் தற்போது அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சார்பாக வெளியான ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் மகேஷ்பாபு நடித்து வந்தார். இந்த விளம்பரங்களில், நிலம் இல்லாத இடத்தின் பெயர் கூறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை நம்பி முதலீடு செய்த ஒருவர், ரூ.34.8 லட்சம் இழந்ததாக நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும், கடந்த ஏப்ரல் மாதம், அமலாக்கத்துறை சார்பில் மகேஷ்பாபுவுக்கு பண மோசடி வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவர், சாய் சூர்யா மற்றும் சுரானா குழுமத்துடன் பிராண்ட் அம்பாஸடராக ஒப்பந்தத்தில் இருந்தபோது, ரூ.5.9 கோடி தொகையை பணமாகவும், செக் மூலமாகவும் பெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதில் சட்ட விரோதமான சொத்துகள் பெற்றிருக்கலாம் என சந்தேகப்பட்ட அமலாக்கத்துறை, விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, இல்லை என்ற இடத்திற்கே விளம்பரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மகேஷ்பாபு நோட்டீஸ் மூலம் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். விரைவில் அவர் நுகர்வோர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.













