ஹைதராபாத் : ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியொன்றில், நடிகை நிதி அகர்வால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிதி அகர்வால், படத்தின் ‘சஹானா சஹானா’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மாலுக்கு வந்திருந்தார்.
நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது, எதிர்பாராத அளவில் ரசிகர்கள் திரண்டதால் அரங்கில் நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் குழப்பமான சூழல் உருவானது. நிகழ்ச்சி முடிந்து வெளியேற முயன்றபோது, கட்டுப்பாடற்ற ரசிகர்கள் கூட்டம் நடிகை நிதி அகர்வாலை சூழ்ந்து கொண்டு அவரை தள்ளியதாகவும், அத்துமீறிய முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் நிதி அகர்வால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். உடனடியாக பாதுகாவலர்கள் தலையிட்டு, அவரை கூட்டத்திலிருந்து மீட்டு பாதுகாப்பாக காரில் அழைத்துச் சென்றனர். காரில் அமர்ந்திருந்த போது, முகத்தை மூடியபடி மனஉளைச்சலுடன் இருந்த நிதி அகர்வாலின் காட்சிகள் வீடியோவாக வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.
இதற்கிடையே, இந்த சம்பவம் நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏற்பட்ட பெரிய பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சிக்காக தேவையான அனுமதிகள் முறையாக பெறப்படவில்லை என்றும், இதுதொடர்பாக மால் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

















