90களில் தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா, சமீபத்திய பேட்டியில் இரண்டாவது திருமணம் தொடர்பான வதந்திகள் குறித்து திறந்த மனதுடன் பேசியுள்ளார்.
குழந்தை நடிகையாகவே ரஜினிகாந்த் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான மீனா, பின்னர் வீரா, எஜமான், முத்து உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் மட்டுமின்றி, தென்னிந்திய மொழிப் படங்களிலும் அவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.
மீனாவுக்கு 2009ஆம் ஆண்டு வித்யாசாகருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். சிறுமியாகவே நைனிகா, விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால், வித்யாசாகர் 2022இல் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, மீனா மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக சில மாதங்களில் வதந்திகள் பரவின. இது குறித்து பேசிய நடிகை, “இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது” எனக் கூறினார்.
மேலும், தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள எந்த விருப்பமும் இல்லை எனவும், தனது முழு கவனமும் மகள் நைனிகா மீதே உள்ளது எனவும் மீனா தெரிவித்துள்ளார்.