நாகை அருகே இருள் சூழ்ந்த சாலையில் விபத்து: அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர் படுகாயம்:
பேடட்டி:
பார்த்திபன் செவிலியர் கணவர்
சதீஷ்குமார் சமூக ஆர்வலர்கள்
நாகப்பட்டினம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் செவிலியர் ஒருவர், நேற்று இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் – தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலை இணைப்புப் பகுதியிலிருந்து ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை உள்ள சுமார் 3 கிலோ மீட்டர் தூரச் சாலையில் போதிய தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் கும்மிருட்டாகக் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், நேற்று பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட அந்தச் செவிலியர், இருள் காரணமாகச் சாலையின் நடுவே படுத்திருந்த கால்நடை மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்ட அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகிலிருந்த பொதுமக்கள் அவரை உடனடியாக மீட்டு, ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சாலையில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் இதுவரை 18-க்கும் மேற்பட்டோர் விபத்துகளில் சிக்கிப் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பெரும் உயிரிழப்புகள் ஏதும் நிகழும் முன், இந்த 3 கிலோ மீட்டர் தொலைவிற்குத் தெருவிளக்குகளை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.













