உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோயிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொலு கண்காட்சி விஜயதசமி நாளான இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது. இந்த கொலு கண்காட்சியைத் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கண்டு களித்தனர்.
சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், பஞ்சபூதத் தலங்களில் பூமிக்குரிய (மண்) தலமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் கடந்த ஒன்பது நாட்களாகக் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது.
இதன் முக்கிய அங்கமாக கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட கொலு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கொலுவில் புராணக் கதைகளை விளக்கும் ஆன்மீகப் பொம்மைகள், தசாவதாரக் காட்சிகள், பாரம்பரிய கலைகளைப் பிரதிபலிக்கும் பொம்மைகள் மற்றும் திருவிளையாடல் புராண நிகழ்வுகள் போன்ற பல்வேறு கருப்பொருள்களை விளக்கும் வகையில் கலைநயமிக்க பொம்மைகள் வரிசையாக அடுக்கப்பட்டு காட்சியளித்தன.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், ஒவ்வொரு பொம்மையின் பின்னணியில் உள்ள கதைகளும் விளக்கப்பட்டிருந்தன.
நவராத்திரியின் இறுதி நாளான இன்று விஜயதசமியை முன்னிட்டு, அதிகாலை முதலே தியாகராஜ சுவாமி மற்றும் கமலாம்பாள் அம்மனைத் தரிசிக்கப் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினசரி சிறப்பு வழிபாடுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்ற நிலையில், விஜயதசமி அன்று கண்காட்சியின் இறுதி நாளை முன்னிட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொலு பொம்மைகளைக் கண்டு களித்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பொம்மைகளைக் கண்டு களித்ததோடு, தங்களது மொபைல் போன்களில் நிழற்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினரும், ஆன்மீகப் பெரியோர்களும் சிறப்பான முறையில் செய்திருந்தனர். திரளாக வந்த பக்தர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

















