திருமணமாகி இரண்டே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா எனும் இளம்பெண்ணின் சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தையும் சிந்தனையையும் ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை துன்புறுத்தலால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் ரிதன்யா இறப்பதற்கு முன் ஆடியோ பதிவொன்றை விட்டுசென்றுள்ளார். அதில், “இந்த வாழ்க்கையை தொடர விருப்பமில்லை” என மன வேதனையுடன் உருக்கமாக பேசுகிறார். இது சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சல், உடல் வன்கொடுமை மற்றும் பெண் என்ற ஒரே காரணத்திற்காகவே ஏற்படும் ஒடுக்குமுறைகளைப் பிரதிபலிக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் வசந்தபாலன் தனது புனிதமான உருக்கமான பதிவில் ரிதன்யா சம்பவத்தை சமூக, கல்வி மற்றும் குடும்ப அமைப்புகளின் தோல்வியாகக் காண்கிறார்.
வசந்தபாலனின் பேஸ்புக் பதிவு :
“ரிதன்யாவின் அழுகுரல் இரவெல்லாம் ஒரு ஒப்பாரிப்பாடலாய் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
ஆணாதிக்கம் நூற்றாண்டுகளாக பெண்களை புரிந்துகொள்ளாமல் இருக்கிறது. பெண்களின் உடலை மட்டுமே மையமாக்கிய பாலியல் புரிதல், சமூகம், திரைப்படங்கள், கல்வி முறைகள் அனைத்தும் பெண்ணை பொருளாக்கிவிட்டன.
ரிதன்யா வழக்கை வெறும் ‘வரதட்சணை’ என்ற கோணத்தில் மட்டும் பார்க்க முடியாது. அவரது உயர்கல்வியும், வாழ்வை எதிர்கொள்ள முடியாத அவல நிலைக்கும் இடையிலுள்ள வாய்ப்புப் பிழை கல்வி முறையின் தோல்வியை நிரூபிக்கிறது.
மாணவர்களுக்கு தேர்வுக்காக மட்டுமே கல்வி தரும் அமைப்புகள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன உறுதியைத் தரவில்லை. பெண் பற்றிய புரிதல், சமூகவியல் பார்வை, வாழ்க்கையின் உண்மை தருணங்களை கற்பிக்காத கல்வி முறையில்தான் நாம் வாழ்கிறோம்.
திருமண அமைப்பு, முதலிரவு, பெண்களின் உடலை சந்தைப்படுத்தும் பார்வை ஆகிய அனைத்தும் மீண்டும் விசாரணைக்கு உட்பட வேண்டியவை. பெண்கள் மீது தொடர்ந்து நடைபெறும் பாலியல் குற்றங்கள் அதற்கு சாட்சி.
இதற்கு தீர்வு காண, பெண்களுக்கு அரசியல், அரசு, தனியார் துறைகளில் 50% இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
சமூக மாற்றம், கல்வி மாற்றம், குடும்ப அமைப்பின் மாற்றம் ஆகிய மூன்றும் ஒன்றாகச் செயல்பட்டால்தான் இதுபோன்ற தற்கொலைகளைத் தடுக்க முடியும். குற்றவாளிகளை மட்டும் தண்டித்து விடுவது தீர்வல்ல.”
இவ்வாறு தனது பதிவில் இயக்குநர் வசந்தபாலன் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக மாற்றமே வழி :
இவ்வகை சம்பவங்கள் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்றன. ஒரு பெண் தன்னால் ஏற்க முடியாத துன்பத்தால் தற்கொலைக்கு தள்ளப்படுவது, பெண்கள் மீதான சமூக பார்வை எவ்வளவு பின்னோக்கி இருக்கிறது என்பதற்கே சான்று.
இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, குற்றவாளிகளை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல், கல்வி, குடும்பம், அரசியல், சமூக அமைப்புகள் அனைத்திலும் பெண்களுக்கு நியாயமான இடம், உரிமை, மரியாதை வழங்கப்படவேண்டும் என்ற வலியுறுத்தல் தற்போது பலரிடமும் அதிகரித்து வருகிறது.